Tuesday, 2 April 2019

படர்க்கை எனும் மூன்றாம் நிலை






இலக்கண இலக்கியமின்றி இயற்கையின் இயல்போடு இயைந்து நிகழும் எண்ணங்களில் தவழும் எழுத்துக்களின் பதிவாய் ....!! 

            நமது சிறு வயதில் தாத்தா பாட்டி கதை கூறி நம்மை உறங்க வைத்ததுண்டு . அதில் சில நிகழ்ந்தவை ...சில கற்பனையாய் ... சில கற்பனைக்கும் எட்டாதவையாய் .... நாமும் நம்பியதுண்டு . காக்கை பாடியது .... நரி பேசியது ... இப்படி என்னவெல்லாமோ கூறியுள்ளார்கள் ... எல்லாவற்றையும் நாமும் நம்பி பகிர்ந்துள்ளோம் . இப்படி நாம் செவி வழி கேட்டது , செய்தி வழி வாசித்தது என அனைத்தும் எவரோ ஒரு மூன்றாம் மனிதரை பற்றியது என்றால் அந்த நிகழ்வு நிச்சயம் நமக்கு கதை ஆகத்தான் தோன்றும். நாம் கேட்டு ரசித்து பகிர்ந்த அன்றைய கதைகள் அனைத்தும் நமக்கு புத்தி புகட்டவும் பலவான் ஆகவும் சாமர்த்தியமும் சத்ரியமும் சொல்லி தந்தன. ஆனால்  இன்றைய நிலை அவ்வாறில்லை . மக்களிடையே சில நேரங்களில் தொல்லை ஆகிவிட்டதென நினைக்க வைக்கும் அளவிற்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் சாத்தான்கள் ஆகிவிட்டன. இடைவெளியில் கதைக்க, ஊடகங்களில் பகிர , பிறரிடம் விமர்சிக்க என ஒரு பொழுது போக்கு நிகழ்வாகி விட்டது. 
           சரி விசயத்திற்கு வருவோம் ... எங்கோ நடக்கும் எல்லாமும் நமக்கு தெரியவந்ததில் லாபம் மட்டுமா  நேர்ந்தது ..??  சிந்தித்து  பார்க்கையில் இல்லை என்பது  மட்டுமே நமக்கு விடையாய் கிட்டும். உதாரணமாய் குறுஞ்செய்தி வழியாய் தகவல் வரும் , இந்த செய்தியை  பத்து பேருக்கு பகிர்ந்தால் ஒருவராவது பயன்பெறுவர் உடன் தொடர்புக்கு தொலைபேசி எண்ணோடு . உடனே பகிர்ந்து விடுவோம் .  பயன் பெறட்டுமென்று நாம்தான் நல்லவர் ஆயிற்றே !!  இன்னும் சற்றே உற்று நோக்கினால் நாம் பகிரும் வலையொளியில் பரப்பப்படும் காணொளிகள்  அதிகம் பேரால் பார்க்கப்பட வேண்டுமென பரபரப்பான தலையங்கங்களில் பகிரப்படுகின்றன. என்றாவது ஒருநாள் நாம் அதன் உண்மை நிலை ஆராய்ந்ததுண்டா ?? பத்து சதவிகிதம் பேர் செய்திருப்பர் . மீதம் உள்ள தொண்ணூறு சதவீதம் பேர் தெரிந்தோ தெரியாமலோ பரப்பும் தவறான செய்தியினால் பாதிக்கப்படுபவர் தான் படர்க்கை நிலையில் உள்ளவர் . ஆம் !  தன்னையும் தன்னை சாராதவருமான மூன்றாம் நிலை மனிதர்கள் !!   
          நாளிதழ் எடுத்து கொள்வோம் , தரவரிசையில் முன்னிலை வகிக்க வேண்டுமென மக்களின் மனநிலையை தாக்கும் வகையில் செய்திகள் வெளியாகின்றன. அதனை நாமும் விமர்சனம் செய்ததுண்டு. வருத்தப்பட்டது உண்டு. நான் நாளிதழ்களையோ  ஊடகங்களையோ  இங்கே சாடவில்லை ... இதழ்களைத்தான் சாடுகிறேன் . அதற்காக எனக்கென்ன என்று இருந்திடவேண்டுமென்று சொல்லவில்லை . எது நல்லது எது தீயது என்று பகுத்தறிய ஆறாம் அறிவு உண்டு . அதில் ஏதும் ஐயம் உண்டோ ?எங்கோ மழை வெள்ளம் வந்து மக்கள் அவதிப்பட்டால் உதவும் நல்லவரும் நாம்தான் ...!! நல்லவேளை இங்கே வரவில்லை நாம் தப்பித்தோம் என்று எண்ணும் நல்லவரும் நாம்தான் ..!! இந்த இரு எண்ணங்களுக்கும் உள்ள வித்தியாசம் தான் படர்க்கை நிலை ... எவர்க்கோ ... நமக்கில்லை ... எனக்கு அது நேரவில்லை ... இந்த எண்ணங்களை பிறர் அவதிப்படும் நேரத்தில் மட்டும் நினைவில் கொள்வது சரியாகுமா ??  நேராமல் காப்பதில் தான் உள்ளது . அதாவது நான் பகிரும் இந்த செய்தி உண்மையாய் இராவிட்டால் அவரின் நிலை என்ன என்ற எண்ணம் நம்மை அதை ஆராயாமல் பகிர செய்யாது . சிந்தித்து செயலாற்றுவோம் . உண்மை நிகழ்வுகள் வரலாற்றின் ஏடுகளில் .. அதனை அல்லாதவை அனைத்தும் கட்டுக்கதைகளே நிலை அறியும் வரை . . .

வாழ்க்கையில்...
தனக்கென நிகழும் வரை
சம்பவங்கள் வெறும் கதைதான்!!
சிலருக்கு வேடிக்கையாய்....
பலருக்கு வாடிக்கையாய்.....
எனது என்ற நிலை
உனதென ஆகும்போது
இதயம் இலகுவாகிடுமோ???
சிந்திப்போம் மூன்றாம் நிலையிலும்
சந்திப்போம் மனிதர்களை அல்ல .....
மனித மனங்களை!!!


இதுவரையிலும் நிகழ்ந்ததை மாற்ற இயலாது . ஆனால் இதற்கு மேல் புதிதாய் நிகழாமல்  செய்ய  இயலும்  .  

                   
                         எதிர்பார்ப்பின்றி வாழ்ந்திடுங்கள் 
                         எல்லையின்றி நேசியுங்கள் 
                                                         - முற்று பெறா முடிவிலி ....



   

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...