Friday, 22 March 2019

கவிதை





உதிக்கும் சூரியனோடு உரையாடி கொஞ்சம்
மதிக்கும் மனிதத்தின் மனதோடு கொஞ்சம்
பறக்கும் சிறகுகளின் பரவசத்தில் கொஞ்சம் 
சிரிக்கும் பூக்களின் இதழோடு கொஞ்சம் 
ஆர்ப்பரிக்கும் கடலின் அலையோடு கொஞ்சம் 
கண்பறிக்கும் சிலையின் கலையோடு கொஞ்சம்
வளைந்த வானவில்லின் வண்ணத்தில்  கொஞ்சம் 
விளைந்த பூமியின் பசுமையில் கொஞ்சம்
சீரும் மனதின் சீற்றங்களில் கொஞ்சம் 
கோரும் புது மாற்றங்களில் கொஞ்சம் 
கதைத்த சொல்லின் கதைகளில் கொஞ்சம் 
விதைத்த வினையின் விதியாய் கொஞ்சம் 
கட்டிய மாளிகையின் மமதையில் கொஞ்சம்
பூட்டிய சிறையின் வெறுமையில் கொஞ்சம்
கற்ற வேதங்களின் அறிவாய் கொஞ்சம் 
மற்ற வேதனைகளின் விலையாய் கொஞ்சம் 
விழி எய்திடும் அம்பில் கொஞ்சம்
மொழி செய்திடும் வம்பில் கொஞ்சம் 
மறந்திட கொஞ்சம் மாய்த்திட கொஞ்சம் 
துறந்திட கொஞ்சம் துதித்திட கொஞ்சம் 
சொற்படி  கொஞ்சம் சுயமாய் கொஞ்சமென 
கொஞ்சம் பார்த்து கொஞ்சம் கேட்டு
கொஞ்சம் உணர்ந்து கொஞ்சம் வியந்து 
கொஞ்சும் தமிழில்  நான் அனுபவித்ததை 
வஞ்சமின்றி வயலில்  விதைத்திட்ட 
விதை - வார்த்தை 
நெஞ்சம் நிறைந்திட விளைந்திட்ட  
விளைச்சல் - கவிதை !!

Wednesday, 20 March 2019

புத்தாண்டெனும் தாய்

நினைவுகளோடு கரைந்து செல்லும்
ஒவ்வொரு நாளின் முடிவிலும் பூக்கிறது
நித்தம் புது  கனவுகளோடு  புதிதாய் 
ஒரு விடியல்  புன்னகையோடு ....
நில்லாமல் ஓடிய  நிமிடங்களின்
சொல்லாமல் போன கதைகள்  !!
செல்லரித்து போய்விடும் 
சின்னஞ்சிறு சண்டைகள் !!
வாஞ்சை சிரிப்போடு
வஞ்சனையில்லா உள்ளங்கள் !!!
களவு போன பொழுதுகளில் 
நெஞ்சை களவாடிய இதயங்கள் !!
உலா போன  நிலவோடு
உறைந்து போன உதயங்கள் !!!
கற்பனைகளோடு  காற்றிலே
மிதந்த காலங்கள் !!!
சொப்பனங்கள் சோதனைகளாகி
நிகழ்ந்த  ஓலங்கள் !!!
என  தினம்  மரணித்த நிமிடங்கள்
ஜனித்தன  கடந்த  வருடத்தின்  நினைவுகளாய் ....!!!!
இதழ்களின் குறுஞ்சிரிப்பில்
இதயங்கள் இதழ் விரிக்க.....
நிகழ்வுகளின் சேகரிப்பில்
நினைவுகள் அதிகரிக்க ......
மீண்டும் பிரசவிக்க காத்திருக்கும்
புது வருடம் !!!

தேசியக்கொடி

பண்பாடுள்ள பாரம்பரியம் ....
எண்ணிலா வளம் ...
எழுத்தில் முடியா  திறம் ...
எளிதில் அடங்கா வீரம் ....
சீர் தூக்கின் வான் எட்டும் துலாபாரம் ...
பார் நோக்கின் கை தட்டும் கலாச்சாரம் ...
வளம் கண்டே வீசினர் வலையை
பணம் கொண்டே பேசினர் விலையை
களம் சென்றே எதிர் நோக்கினர் நிலையை
பலம் கொண்டே தாக்கினர் தலையை .....!!
தாய் நாட்டிலே  அடிமைகளாய்...
வாய் பேசாத ஊமைகளாய் ....
பொறுமை காத்தான் ....
நிலை  மாறவில்லை 
பொங்கி எழுந்தான் ... !!!
போராட்டம் விடியும்  வரை ....
பனிமூட்டம் விலகும் வரை ....
வயல் வெளிகள் யுத்தகளங்களாய்
வான்வெளியில் ரத்தநிறங்கள் ....!!!
இழந்தான் உயிரை ....
விதைத்தான் பயிரை ...
முளைக்கும் உயிர் வேரூன்றி மரமாய் ..
தழைக்கும் பயிர் பயமின்றி தரமாய் ..
புது விடியல் தேடி ....
புது சுவாசம் தேடி .....
புது விலாசம் தேடி ...
அடைந்தான் சுதந்திரம் ....
வீரம்  கொண்டே இன்னுயிரை 
தியாகம் செய்தோர்க்கு திலகமென  காவியாய் ...!!
சத்தியம் என்றும் வெல்லும்
தூய்மை குணம் கொண்டதென வெண்மையாய் ...!!!
வளம் கொழிக்கும் பூமி
வற்றாதென  நிலம் செழிக்கும் 
பசுமையாய் ....
சுழலும் நாட்கள் தினம்
கழியும் மூவெட்டு நேரமென
சக்கரமாய் ....
வடிவமைத்தானோ தேசியக்கொடியை ....!!!

மலைத்திடும் இயற்கை

வான்  சிந்திய  மழைத்துளியில்
நனைந்த  பச்சைக்கொடிகள்
இச்சையோடு  பெற்றெடுத்தனவோ
தேன் சிந்தும்  மழலையை  !!

தேன் சிந்தும் மலரிதழில்
பசியாறி பல்லுயிர் பெருக்க
தான் தேடி வந்தனவோ
ருசியறிந்த வண்ண சிறகுகள் !!!

சிறகுகளில் சிக்கிய மகரந்தங்கள்
காற்றோடு கதை பேசி
சேறோடு விதையாகி வளர்ந்தனவோ
நிழல் தரும் விருட்ஷமென !!!

விருட்சத்தின் நிழலில் இளைப்பாற
விருந்தானது வீசிடும் காற்று ...
மருந்தும் தேவையோ மலைத்திடும்
இயற்கையோடு வாழ்ந்திடும் வாழ்வில் !!

நினைவுகள்




என்றாவது ஒரு நாள்
எங்காவது நீ பார்த்து
பூக்கும் புன்னகைக்கு விலை அதிகம்
அருகில் இருந்தும்
அரவணைக்காத உன் அன்பிற்கு ....
நீ கொடுத்து சென்ற நிமிடங்கள்
நீ சென்றதை விடவும்
வினாடிகளில் தொலைந்து போனது ...
மயிலிறகாய் எனை வருடும்
உன் நினைவுகளுக்கு
எப்படி சொல்லுவேன்  என்
உயிர் பறிக்கும் ஆயுதம் நீ என்று ???
விட்டுச் சென்ற உன்
நினைவுகளை இன்னமும்
சுமந்து கொண்டிருக்கிறேன் ...
ஜனிக்காத பிள்ளையை
தாய் சுமப்பது போல....
தீண்டி செல்லும் காற்று
மூச்சை திருடி சென்றால்
சுகம் காண்பேன் ....

நினைவுகள்



விழிக் கடிதம்

உன் இதயம் என்னோடு பேசும் 
உரையாடல்கள் நான் அறிவேன்...
மௌனமாய் உன் விழி போடும் 
கடிதங்கள் நான் படித்தேன் ...
இதழ்கள் பிரியாது 
இதயம் சேராது ...
போதும் உன் மௌனம் ...
விழிக் கடிதம் விடுத்து 
மொழி பேசிடு...

மீட்டெடுக்கிறேன்

காற்றுக்கு அசையாக் கொடியாய் என் நெஞ்சம்
அசைந்து கொடுத்தது உன்னிடத்தில் ....
பாறை இடுக்கில் முளைவிட்ட செடியாய்
என் இதயத்தில் நீ மலர்ந்தாய் சிறு பூவே !!!

விதைக்கப்படாமல் முளைத்து விட்டதால் என் நெஞ்சில்
வேரில்லாமல் நிலைத்து விட்டாய் ...
களங்கமில்லா உன் அன்பால் நிலவு
தேய்வது கூட எனக்குத் தோன்றவில்லை ...
என்றும் ஒளி வீசுகிறது பௌர்ணமியாய் .....!!!!

என் இதயவானில் ஒளி வீசும் நிலவு நீ !
என் கனவுத் தோட்டத்தில் கால் பதித்த முதல் பூ நீ !!

உன்னைப் பார்க்க கண்கள் ஏங்கவில்லை
பார்த்த பின்போ தூங்கவில்லை -
உறக்கம் கொடு கண்ணே என் விழிகளுக்கு !

பட்டுக் கரங்களைத் தொட்டுப் பேசியபோது
மனதில் எழாத எண்ணம்
எட்டு வைத்து நடந்த போது சொல்கிறது
என்றும் உன் கரம் கோர்த்து நடக்க .....

பழகிய நாட்களில் துடிக்காத உள்ளம்
விட்டு விலகிய போது துடிக்கிறது ...
உன் மீதான என் காதலை உணர்த்திட .....

என் இரவுத் தோட்டத்தில்
பல கனவுப் பூக்கள்
மலர்ந்து உதிர்ந்து போயின ....
என்றும் உதிரா மலராய்
என் கனவில் மலர்ந்து
என்னுள்ளே வாசம் செய்கிறாய் நீ !!

கனவில்
என்னோடு நீ வாழும்
ஒரு அத்தியாயம் புதிதாய்
உன்னோடு நான் தொடங்க ஆசைதான் ...!!!
எனினும் உன்னிடத்தில் சொல்லாது
என் இதயம் மட்டும் மானசீகமாய்
வாழும் உன்னோடு எப்போதும்....!!!

சில நேரங்களில் உன் மௌனம் கூட
எப்போதும் வேண்டும் என யாசிக்கிறேன்
என்னை வேண்டாம் என்று உன் இதழ்கள்
மறுத்திடுமோ என்ற அச்சத்தில் ....!!

பல நேரங்களில் உன் உரையாடல்களில்
நான் தொலைந்தே போகிறேன்
மீண்டும் என்னை மீட்டெடுக்கிறேன்....
மறுபடியும் தொலைந்திடவே !!!

விருப்பம்தான்
வாழ்நாள் முழுதும்
உன்னில் நானும் என்னில் நீயும்
தொலைந்து  விட ....!!!



வாழ்த்துக்கள்


தினம் பூக்கும் புது மலராய்
மனம் வீசும் நறுமலரே !!
அகமகிழ்ந்து முகம் மலர்ந்து
புன்னகை ஒளி வீசும் நிலவே ..!!!

புதிதாய் ஒரு அத்தியாயம்
புனைய போகும் இந்நாளில் ....

கவிதையில் வாழ்த்து கூற
நானும் கவி என நினைத்து
வார்த்தை தேடலில்...

புவி முழுதும் மாற
வானும் வந்ததோ  மண்ணிற்கு
கார்மேக சாயலில் ...

தேடிய வார்த்தையில் உனக்காய்
வரைந்த வாழ்த்தை
தவழ்ந்து வரும் மேகத்தின்
மழைத்துளியில் அனுப்பினேன் ...

பிரித்து படிக்கும் முன்னே
மறைத்து வைத்த புன்னகை
எட்டி பார்க்க வேண்டும் இதழிலே ...
என்றும் உன் வாழ்விலே .....



பெற்றோர்

வலிகள் அவனுள்ளே  இருந்த போதும்
விழிகள் பேசியதில்லை
வழித்துணையாய்  என்றும்
துணை வரும் - இவன் மொழி

புன்னகைக்க மட்டுமே கற்றுக் கொண்டவள்
என் முன்னே
கண்ணீர்துளிகளை காற்றுக்கு மட்டும்
தத்து கொடுத்தவள்- இவள்

தோற்றங்கள் மாறினும்
ஏற்றங்கள் காண்பினும்
வருடங்கள் ஓடியும்
வயது கூடியும்
வாழ்வில் என்றும்
இவனுக்கு துணையாய் இவள் !!
இவளுக்கு இணையாய் இவன் !!

பூமியில் நானும் பூக்க காரணம் - இவர்கள்
பெற்றெடுத்தவள் - இவள்
கற்று கொடுத்தவன்  - இவன்




மெய்யன்பு

நாடக மேடையென்றே எழுதிட்டான்
நடித்திட கதையொன்றை வகுத்திட்டான் ...

மனித முகமோ மாறுபடும் - இதில்
மனமோ முற்றிலும் வேறுபடும் !!

சிரித்திடும் அவன் முகம் - சிந்தித்திடு ..
தரித்திடும் அவன் வேஷம் கண்டு !!

காரியம் நடத்திட நடித்திடுவான் - அவன்
காலும் கையுமே பிடித்திடுவான் !!

பொழிந்திடும் அன்பிலே பொய்மையுண்டு - அவனின்
நெகிழ்ந்திடும் பேச்சிலே கயமையுண்டு !!

தெளிந்த நீரென தெரிந்திடுவான் - நீ
களித்து பருகிட்டால் கலங்கிடுவான் !!!

தேவதை அவளென நினைத்திடுவாய் -
தேள் போல் அவளும் கொட்டிடுவாள் ...!!

பூவென்று எடை குறைவாய் மதிப்பிட்டால்
புயலென்று தடை நீக்கி வதைத்திடுவாள்  !!

புறத்தே கண்டு புரிந்திடாதே ...
அகத்தை உணராது சரிந்திடாதே !!!!

எந்திர வாழ்வில் இதயம் துடித்திடுமா
பிறர்க்காய்??
மந்திரம் செய்தாலும் நிகழுமோ
அவ்வற்புதமே !!!

பொதுவாய் இது சிலர் குணம் ....
சாதுவாய் இருப்பது அலர் மனம் ..

மெய்யன்பை தேடியே அலையாதே ...
உன்னுள்ளே ஒளிந்திருக்கும்  தொலையாதே ..
உண்மையாய் வருந்திட்டால் களையேது ??
தன்மையாய் இருந்திட்டால் பிழையேது ???

 

தோழமை

முகம் பார்க்கும் முன்னே
முகவரி தெரியும் முன்னே
முதல்வரியில் பெயர் கண்டே
நண்பன் என தேர்ந்தேன் !!

கண்ட நாள் முதலாய்
காணும் நாள் வரையில்
காணாத பொழுதிலும்
துணையாய் என்றும் நீ
தோழன் என நின்றாய் !!!

சோகங்களில் மனம் தேடிய
குரல் உனது தான்
சமயங்களில் என்னை தேற்றும்
ஆறுதல் நீ தான்
நான் சுடர் எனினும்
தூண்டுகோல் நீ தான் .....!!!

நான் நானாக இருப்பதை
விரும்பியவன்...
என் எண்ணங்களை செயல்களில்
மெருகேற்றியவன்...
எனக்குள் இருக்கும் என்னை
அறியவைத்தவன்....

என் தொடக்கங்களில்
உன் தோழமை
துணை பலம் .....!!!

என் வார்த்தைகளில்
உன் பிரிவு
விலை அதிகம் ...!!!





புத்தாண்டெனும் மழலை

௧௧.௫௯ .௫௮ -௨௦௧௮ ⏳
௧௧.௫௯.௫௯- ௨௦௧௮⏳
௧௨.௦௦ .௦௦ - ௨௦௧௯🕛
கடிகாரம் நொடிமுல்லை நகர்த்தி செல்ல
..........................................................
விடிந்தது🌤  கொடிமுல்லையென நடுநிசி🌝 !!
விழித்தது 🌞இரவு களிப்போடு
மகிழ்ந்தது 😃மனதும்  பூரிப்போடு ....!!
திருவிழா கோலம் பூண்டது இரவு
கருவிலே காலம் ஈன்றது புது உறவு ...!!
கோப்பையில்🍷 மகிழ்ந்தது சில உள்ளம்
கோப்புகளில் 📂 விடிந்தது சிலர் இல்லம் ...!!
வானெங்கும்☁ வானவேடிக்கை🌋 ...
வீதியெங்கும் வண்ண கோலங்கள்🏵 ...
சீறிச்செல்லும் உந்துகள்🚌🚕...
பாடிச்செல்லும் சிந்துகள்🎹🎷🎸🎼 ...
பலருக்கு மற்றுமொரு நாளை ...
சிலருக்கோ புத்தம்புது காலை ..!!
புத்தாண்டு வாக்குறுதி 
புனையப்படா விதி !!

இறந்த காலங்கள் வரலாறாய்  !!
கடந்த பாதையின் காலடிச்சுவடுகளை  சுமந்திட
நிகழ்காலங்கள் நிகழ்வுகளாய் !!
நிஜங்களை நிழற்படம் எடுத்திட
எதிர்காலங்கள் அத்தியாயமாய் !!
வரலாற்றின்  அடிக்கல் நாட்டிட
மடிந்திடும் ஒவ்வோர் நொடிக்குள்ளும்
பூத்திடும் புது சந்தர்ப்பம்
சந்தர்ப்பம் சாத்தியமாகி
சரித்திரம் படைத்திட
மீண்டும் பிறந்திட்டது
புத்தாண்டெனும் மழலை !!

நிஜங்கள் மறைந்திடினும்
நிகழ்வுகள் மடியாது
அகழ்ந்தெடுத்திட நினைவுகளுண்டு ...!!!
எனவே
விதைத்திடுவோம் புன்னகையை
புதைத்திடுவோம் பகைமையை .....!!!

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...