Saturday, 28 October 2017

தமிழோடு உறவாடி......!!!


தவித்தது என் இதழ்கள் !!
தாகம் உண்டாக்கினாய் ...
வேட்கை தணியேன்
முழுதும் பருகாமல் ....

அலைந்தது என் விழிகள் !!
நிலையாய் நிற்க செய்தாய் ...
திக்கை அறிகிலேன் 
உன்னை விலகாமல் ...

மறந்து  போனது உறக்கமும் 
இரந்து கேட்டன கண்களும் 
இரக்கம் காட்டிட இமைகள் மூடிட !!

எழுதிட துடித்திடும் பேனா முனை 
தழுவிட மறுத்திடும் வண்ண தூரிகை 
நீ கொள்ளை அடித்ததினால் 
வெள்ளை காகிதமாய் மனது!!!

வியந்தது மதி ...பயந்தது தேதி ....
கசந்தது கனியும் ... அசந்தது அணியும் ...

படிப்பது உனையென்றால் வியந்ததில் 
வியப்பேது ??
முடிக்காது வினையில்லையெனில் பயந்ததில் பிழையேது ??
இனிப்பது நீயென்றால் கசந்திடாதோ 
கனியும் !!!
வனப்பு உனதெனில் அசந்திடாதோ அணியும் !!!

அமுதினும் இனிமை நீ என்றான் 
அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சாம்  அதிகம் உனை நான் கொண்டேன் 
அஞ்சேன் நீ நஞ்சாகினும் !!!

அழைப்பது  நீ என்றால் 
சிலையாக நான் இருப்பேனோ ??
வளைத்தது நீ என்றால்
மலையாக  நான் கிடப்பேனோ ??

முதல் காதல்

Related image


அண்ணலும் நோக்கிட அவளும் நோக்கிட 
அஞ்சுகத்தின்  விழி  எய்திய  அன்பில் 
அண்ணலவன்  விரல் எய்திய அம்பில் 
மலர்ந்தது  காவியக்  காதல் !!

பூத்த பருவம்  முதலாய் 
மாயும்  காலம்  வரையில் 
சேர்த்த  அவன்  ஞாபங்களை 
கோர்த்து மாலையாக்கி 
சூடிடும் கன்னி காதல் ...!!

ஈர்த்திடும்  அவள்  அழகில் 
கோர்த்திட  ஏங்கும்  கைகள் 
உதிர்த்திடும்  அவள்  மொழியில் 
அடங்கி  போகும்  காளையர்  காதல் ...!!

காற்று  வீசிட  கண்கள்  உறங்கிட 
தென்றலாய் மனந்தன்னை தீண்டிடும் 
விழித்து  எழுந்ததும் தானாய் 
கலைந்திடும் கனவு காதல் ....!!

சிறு சிரிப்பில்  சிறகடிக்கும்  இதயம் 
குறுஞ்செய்தியில்  மறுபிறப்பெடுக்கும் 
மெலிதாய் துளிர்  விடும்  ; சிலது 
முழுதாய்  மரமாகும்  கல்லூரி  காதல்  ...!!

முதல்  பாதியில்  மையல்  கொள்ளும் 
கானம்  பாடியே மனம் வெல்லும் 
முற்றும் என்றதும்  ஓசை  இல்லாமல் 
மடிந்து போகும்  சினிமா காதல் ....!!

பருவம் எதுவாயினும் 
உருவம் மாறிடினும் 
உறவுகள் தோன்றினும்
உயிர்ப்போடு என்றும் 
மறந்து போகா நினைவுகளாய்
இறந்து போகாத முதல் காதல் ....!!

Wednesday, 13 September 2017

தோழன் என்றொருவன் !!!


கைப் பிடித்து வழி செல்வான்
கணவனும் அல்ல .....
தோள் சாய்ந்து கதை அளப்பான்
காதலனும் அல்ல ....
தலைக் கோதி ஆறுதல் சொல்வான்
தந்தையும் அல்ல ....
அலைய வைத்து வம்பு செய்வான்
தமையனும் அல்ல ...
ரத்தத்தில் வந்த சொந்தம் இதுவல்ல !!!
மொத்தத்தில் இந்த உறவுக்கு உருவம் இல்லை !!!
நீரைப் போல் சேரும் குணம் உண்டு
நண்பன் என்று அவனுக்கு பெயரும் உண்டு !!!!







Saturday, 19 August 2017

வானம் ஒன்று ....வர்ணங்கள் நூறு !!


கருவிலே குழந்தை என்றாய்...
பிறந்தேன் பாலினம் கண்டாய்...
வளர்ந்தேன் மதஇனம் பிரித்தாய்...
பள்ளியிலே சாதிச் சான்றிதழ்!!
பாடப் புத்தகத்திலே ???
சாதிகள் இல்லையடி பாப்பா !!!
மனப்பாடத்தில்  மட்டும் பாட்டுண்டு....
மனப்பக்குவத்தில் ஏனில்லையோ ????

கீழவீதியில்  அவன்  நுரையீரல்  தீண்டிய  காற்று எனை
தீண்டியதில்  நான் தீண்டத்தகாதவன்  ஆவேனோ  ??
மழைமேகம்  பொழியும்  நீர்  இவன் வாசல்
தாண்டியதில்  அது புண்ணிய  நதியென  மாறிடுமோ  ??

பருகும்  நீருக்கு  வண்ணம்  இல்லை
சுவாசிக்கும்  காற்றுக்கும்  பகுப்பு இல்லை
கருவின் உயிருக்கு  மட்டும்  வர்ணம் ஏனோ ??
நேசிக்கும்  இதயங்களை  பிரித்து  வைத்திட  தானோ !!

மனம்  மாற  நினைத்தாலும்  மதி  கெட்டு  போயின்
குணம்  மாறிடாது மத  வெறி தலைக்கு  ஏறிடின்
சினம் கொண்டு  எழுந்திடு  சாதி  யாதென  கேட்பின்
கணம்  இதுவே எதிர்த்திட  மாற்றி  எதையும்  வகுத்திட ...!

Saturday, 12 August 2017

முற்றுப்பெறா முடிவிலி!

வாழும் சிறிது காலத்தே எண்ணமதில் 
எழும் சிந்தனைகள் ஞாலத்தினும் அதிகம் 
சூழும் கற்பனைகளில் கோட்டைகள் கட்டப்பட்டு 
நாளும் கழிகிறது நகைப்புடனே நாட்கள் !!!

ஆயினும் ;
வாழத்தான் வேண்டும் வாழ்க்கையை !!
எழத்தான்  செய்தது என்னுள் 
எண்ணமும் 
வாழ்க்கையின் வனப்பரிய !!!

வாழ்க்கை  ஒரு  புதிர் என்கிறான் 
விடை இல்லா வினாவோ  ??

வாழ்க்கை ஒரு பந்தயம் என்கிறான் 
வெற்றி மட்டும் தான் இலக்கோ ??

வாழ்க்கை ஒரு  பயணம்  என்கிறான்
பாதை அறிந்தால் பயம் இல்லையோ ??

வாழ்க்கை ஒரு பாடம் என்கிறான் 
அறிந்தவர் மட்டும் தேர்ச்சி பெறுவரோ ???

வாழ்க்கை ஒரு வரம்  என்கிறான் 
தவம் செய்தால் பலன்  கிட்டுமோ ??

வாழ்க்கை ஒரு புதையல் என்கிறான்
ரகசியம் அறிந்தவன் ராசியானவனோ ??

வாழ்க்கை ஒரு கலை என்கிறான்  
வித்தை கற்றவன் இன்புற்றிருப்பானோ ??

வாழ்க்கை ஒரு போராட்டம் என்கிறான் 
புனையப்படா விதிக்கும் புரிந்துவிடும் 
மதிக்கும் இடையிலோ??
வாழ்க்கை ஒரு புத்தகம் என்கிறான்
புதினமா இல்லை ஆய்வு கட்டுரையா ??

வாழ்க்கை ஒரு மேடை என்கிறான் 
பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டவையோ ??

வாழ்க்கை ஒரு வெற்றிடம் என்கிறான் 
நிரம்பி வழியும் ஆசைகள் 
நிலையாததாலா? 

நன்றோ தீதோ அறிந்தவர் யாரோ ??
என்றோ எழுதிவைத்த நியதி எதுவோ ??

மெய்யும் உயிரும் சேர்ந்தே செய்யும் 
வினையது விலக்கிடும் வாழ்வதை 
உய்யும் பொழுதே உற்றோர்க்கு உதவிட்டால் 
உயிர்மெய் இழந்தாலும் சூட்டிடுவர் வாகைதனை !!!

முயன்று தான் பார்த்திட்டேன் அறிந்திட 
முற்றும் உணர்ந்தே முற்றுப்புள்ளி  வைத்திட 
காற்புள்ளி வைத்தே கடக்கிறேன்  முற்றுப்பெறா முடிவிலி இதுவோ ???


 





Thursday, 6 July 2017

ப(கு)ணம்




பழுப்பு வெள்ளை சிவப்பு பச்சை
பல வர்ணம் தரிக்குது ....!
மறுப்பு சொல்லா  மனுஷனோட
சட்டை பையில் சிரிக்குது ...!

கடலோரத்தில் கருவாடாய்....
கோபுரத்தில் உண்டியலாய்....
கயவனின் கயமையாய் ...
கலைஞனின் தூரிகையாய் ...
கவிஞனின் புத்தகங்களாய்...
உழவனின்  மண்வாசனையாய் ....
உழைப்பாளியின் வியர்வையாய் ...
வறியவனின் பட்டினியாய் ....
இதற்கு ....
வாசம் ஏராளம் - பலர்
வசமோ தாராளம் ....!!

கோஷம் போட வைக்கும் வகையாய்
வேஷம் போட்டிடுமே.....
கும்பிடும் போட வைக்கும் கைதியாய்
கம்பியும் எண்ண  வைக்கும் ...!!

தந்திரமே செஞ்சிடும் இது
மந்திரம் போட்டே மயக்கிடும்
எந்திரமாய்  ஆக்கிடும்  மனிதனை
கயவனாய் மாற்றிடும் !!!!

தொட்டிலுக்கும் காட்டுக்கும்  நடுவிலே
கோட்டை கட்டி வாழ்ந்தாலும்
குடிசையிலே  வளர்ந்தாலும்
மண்ணுக்கு போகும் பிறப்பிது
மக்கியபின் அதுக்கு மதிப்பேது ???

வெறும் காகிதம் தான் ஆனாலும்
வாழ்க்கை அது பின்னே ஓடுது
தேடும் வரை தூரம் இல்லை
கிடைத்த பின்போ பாரம் உண்மை !!

சேர்த்து வெச்ச சொத்தெல்லாம்
செத்த பின்னும் வந்திடுமா ???
பகிர்ந்து வாழ்ந்தால் பலரோடு
நாடும்  நம்  வீடாய் ஆகிடுமே !!!!











Wednesday, 8 March 2017

பெண்ணெனும் ஓவியம் ....!!!




வெட்கப் புன்னகை கொண்டு
மயக்கிடும் மாயாவி அவள்!!

வெற்றுப் புன்னகையிலும்
ஈர்க்கும்  காந்தவிசை அவள்!!

தாயாய்  அவள் தாலாட்டுவாள்
சேயாய்  இவள் வாலாட்டுவாள் !

தாரமாய் துணை நிற்பாள்
ஆதாரமாய் மனை வந்தவள் !!

தங்கையாய்  அண்ணனை   தோற்பாள்
மங்கையாய்  மண்ணை  வெல்வாள்  !!!

கண்ணிலே அன்பு கொண்டு பேசுவாள்
மண்ணிலே நேசம் கொண்டு தூறுவாள் !

தூரிகையின் நிறங்களென
அவள் குணங்கள்
காரிகையின்  மனம்  பேசும்
மொழியோ  பல வண்ணங்கள் !!

கோபத்திற்கு பின் அன்பும்  உண்டு
அனுதாபத்திலே அத்துமீறலும் உண்டு

அன்பைத் தூறல் போலவும்
பெருமழையெனவும் பொழிபவள் !!!

ஆணென்னும்  காகிதம்  தனிலே
வரைந்திட்ட இவள்
பெண்ணெனும்  ஓவியம் ....!!!


















Tuesday, 7 March 2017

தேடல்





நிகழ்காலங்கள் இறந்தகாலமாய்
எதிர்காலங்கள் நிகழ்காலமாய் 
நொடிக்கு நொடி மாறிக்கொண்டே 
விடியும் இந்த பிரபஞ்சத்தில் 
மாற்றம் தேடுகிறோம் !!!

புதியதொரு உலகைத் தேடி...
புதையலைத் தேடி ....
அன்பைத் தேடி ..
இறுதியில் தொலைந்தே போகிறோம் ....!!!

இருப்பதில்  ஆனந்தம் இல்லை
தொலைத்ததிலோ வருத்தம் கொள்ளை
வாடிய பூக்களால் வசந்தம் வருவதில்லை
நாடிய பூக்களோ தேன்சிந்த மறுத்ததில்லை ......

தேடுவோம் ...!!
தொலைந்து  போய்விடாத தேடலை
தன்னை  தன்னில்  .......
தொலைத்து விடாத தேடலை
தன் இன்மையை
தொலைத்து விடும் விடியலை ....!!!!



தேடுங்கள் பெண்ணில் அன்பை மட்டும்!!!



Image result for woman images art






பெண்ணைப் பூவென்றான்
கசக்கி எரிந்திடத்தானா ?
பெண்ணை நிலவென்றான் 
உலவிடும்போது களவாடத்தானா ?

பெண்ணை கிளியென்றான் 
கூண்டுக்குள் அடைத்திடத்தானா ?
பெண்ணை நதியென்றான் 
அள்ளி பருகிடத்தானா ???

பூத்த  புதுமொட்டும் 
பூப்பெய்திய  சிறுசிட்டும் 
பூமியில் பிறப்பது 
பூட்டி வைத்தே புதைத்திடத்தானா ?

கன்றோ கறவைமாடோ 
காளைக்கு உணவாகத்தானா ?

மூன்று வயதும் மூவாறு வயதும் 
மூர்க்கன் கண்ணுக்கு பேதமில்லையோ ?

மாதர் தம்மை இழிவு செய்யும் 
மடமை தனை  கொளுத்திட வேண்டும் - அது 
மகாகவி பாரதி வாக்கு....

பேதை தனை இழிவு செய்து 
போக்கிட வேண்டும் வன்புணர்ச்சியை - இது 
மக்கள்  சிலர் போக்கு ....

தாவணியிலும் வதைக்கிறாய் 
தமையன் நீயென்றாலும் சிதைக்கிறாய் 
தாரமென ஒருத்தி இருப்பதை  மறக்கிறாய்

போகப் பொருளல்ல அவள் 
உன் போதைக்கு மருந்தாக....
உன் இச்சைக்கு விருந்தாக ....

விலங்கினமே உனை விட மேல் ....
மனிதனாய் மனிதம் உணர்ந்து வாழ் ...

இனியேனும்..... 
பூக்கள் பூக்கட்டும் பூஜைக்காக 
நிலவு ஒளிரட்டும் பௌர்ணமியாய் 
கிளி பறக்கட்டும் சுதந்திரமாய் 
நதி பெருகட்டும் நீர்விழ்ச்சியாய் .....!!!!










மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...