பெண்ணைப் பூவென்றான்
கசக்கி எரிந்திடத்தானா ?
பெண்ணை நிலவென்றான்
உலவிடும்போது களவாடத்தானா ?
பெண்ணை கிளியென்றான்
கூண்டுக்குள் அடைத்திடத்தானா ?
பெண்ணை நதியென்றான்
அள்ளி பருகிடத்தானா ???
பூத்த புதுமொட்டும்
பூப்பெய்திய சிறுசிட்டும்
பூமியில் பிறப்பது
பூட்டி வைத்தே புதைத்திடத்தானா ?
கன்றோ கறவைமாடோ
காளைக்கு உணவாகத்தானா ?
மூன்று வயதும் மூவாறு வயதும்
மூர்க்கன் கண்ணுக்கு பேதமில்லையோ ?
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை தனை கொளுத்திட வேண்டும் - அது
மகாகவி பாரதி வாக்கு....
பேதை தனை இழிவு செய்து
போக்கிட வேண்டும் வன்புணர்ச்சியை - இது
மக்கள் சிலர் போக்கு ....
தாவணியிலும் வதைக்கிறாய்
தமையன் நீயென்றாலும் சிதைக்கிறாய்
தாரமென ஒருத்தி இருப்பதை மறக்கிறாய்
போகப் பொருளல்ல அவள்
உன் போதைக்கு மருந்தாக....
உன் இச்சைக்கு விருந்தாக ....
விலங்கினமே உனை விட மேல் ....
மனிதனாய் மனிதம் உணர்ந்து வாழ் ...
இனியேனும்.....
பூக்கள் பூக்கட்டும் பூஜைக்காக
நிலவு ஒளிரட்டும் பௌர்ணமியாய்
கிளி பறக்கட்டும் சுதந்திரமாய்
நதி பெருகட்டும் நீர்விழ்ச்சியாய் .....!!!!
No comments:
Post a Comment