Friday, 7 August 2020

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட

காலங்கள் கடந்து வாழ்ந்திட 

விண்ணும் மண்ணும் சேர்த்து 

பூமிக்குள் சொர்க்கம் படைத்தார் 

இயற்கை அன்னை ....!!!


பச்சை புல்வெளி போர்த்திய நிலப்பரப்பு 

வெள்ளி மின்னலாய் புரண்டோடும் நீர்வரத்து..

கானகம்  வளம்  பாதுகாக்க மிருகக்கூட்டம் 

வானகம் ஜொலித்திட விண்மீன் கூட்டம் ....

சில்லென்று தீண்டிடும் தென்றல் காற்று 

சுள்ளென்று சுட்டிடும் கதிரவன்  கீற்று ..

பூத்து குலுங்கும் வாசமிகு மலர்வனம் 

சேர்ந்து வாழ்ந்திடும் நேசமிகு மனித இனம்...


சுழலும் பூமி வளமாய் இருந்ததால் 

வாழ்த்தி சென்றாராம் ....

செழித்து வாழ்ந்திட மனிதன் கையில் 

விடுத்து  சென்றாராம் .... 

இயற்கை அன்னை வரமாய்  தரமாய் 

கொடுத்து சென்றாராம் ....

இருப்பதை பகிர்ந்து மேலும் பெருக்கிட 

பொறுப்பை தந்தாராம் .....


காலங்கள் உருண்டோட.....

இயற்கை அன்னை ஒருநாள் 

சுற்றுப்பயணம் மேற்கொண்டாராம்...

அடடா பூமி செழிப்பாய் இருக்குமென்று 

ஆவல் கொண்டாராம் ....

ஐயம் கொண்டு வழிமாறியதோ என்று 

விழிபிதுங்கி நின்றாராம் ....


நீரின்றி வறண்ட நிலங்கள்

வாழ்விடமின்றி வழி மாறிய மிருகங்கள்

சுழற்சி முறையற்ற தட்ப வெப்ப மாற்றங்கள்

சுவாசித்தால் திணற வைக்கும் காற்று 

வாசம் இழந்த மலரின் மணம் .....

நான் படைத்த உலகம் இதுவல்லவே ....!!!


வரமாய் பெற்றதை வைத்து வளமாய் 

வாழும் வழியை மறந்தான் மனிதன் .....


இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதன் எங்கே???

தானியங்கியாகி தன்னலமாய் மானுடம் மறந்தானோ!!!!


குடிப்பதற்கே நிலத்தில் நீரில்லை எனும்போது 

குளிர்பானங்கள் எங்கிருந்து வந்தனவோ ??


நடைபிணமாய் வாழ்ந்திடும் உனக்கு

நெடுஞ்சாலைகள் எங்கு செல்வதற்கு ???


உணவை விளைவிக்க நிலமில்லை எனும்போது 

உறைவிடமாக பெருங்கட்டிடங்கள் எவ்வாறு 

வளர்ந்தனவோ ??


விளையும் பூமியை வீழ செய்து ....

வேலைவாய்ப்பு ஏற்படுத்தி வாழ வா என்கிறான்..... 


கானகம் அழித்து இடம்பெயர்ந்து 

வீட்டுக்கொரு மரம் வளர்க்க வேண்டும் என்கிறான் ....


குடிசை வீட்டில் குளிர்க்கிறதென்று 

கூரைக்கு கொள்ளி வைப்பாருண்டோ ???


நுனிக்கிளையில் அமர்ந்தே மரத்தை வெட்டும் 

மனிதா .....உன்னிடம் 

தன்னை புதைத்திட குழி தோண்டும் வித்தை 

கற்றுக்கொள்ளலாம் போல !!


பூவுலகாய் மாற்றாவிட்டாலும் 

புதை குழியாய் மாற்றிடாதே 

இனியேனும் பூமியை.... என்றே

இயற்கை அன்னை மறைந்தாராம்.....


மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...