Friday, 7 August 2020

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட

காலங்கள் கடந்து வாழ்ந்திட 

விண்ணும் மண்ணும் சேர்த்து 

பூமிக்குள் சொர்க்கம் படைத்தார் 

இயற்கை அன்னை ....!!!


பச்சை புல்வெளி போர்த்திய நிலப்பரப்பு 

வெள்ளி மின்னலாய் புரண்டோடும் நீர்வரத்து..

கானகம்  வளம்  பாதுகாக்க மிருகக்கூட்டம் 

வானகம் ஜொலித்திட விண்மீன் கூட்டம் ....

சில்லென்று தீண்டிடும் தென்றல் காற்று 

சுள்ளென்று சுட்டிடும் கதிரவன்  கீற்று ..

பூத்து குலுங்கும் வாசமிகு மலர்வனம் 

சேர்ந்து வாழ்ந்திடும் நேசமிகு மனித இனம்...


சுழலும் பூமி வளமாய் இருந்ததால் 

வாழ்த்தி சென்றாராம் ....

செழித்து வாழ்ந்திட மனிதன் கையில் 

விடுத்து  சென்றாராம் .... 

இயற்கை அன்னை வரமாய்  தரமாய் 

கொடுத்து சென்றாராம் ....

இருப்பதை பகிர்ந்து மேலும் பெருக்கிட 

பொறுப்பை தந்தாராம் .....


காலங்கள் உருண்டோட.....

இயற்கை அன்னை ஒருநாள் 

சுற்றுப்பயணம் மேற்கொண்டாராம்...

அடடா பூமி செழிப்பாய் இருக்குமென்று 

ஆவல் கொண்டாராம் ....

ஐயம் கொண்டு வழிமாறியதோ என்று 

விழிபிதுங்கி நின்றாராம் ....


நீரின்றி வறண்ட நிலங்கள்

வாழ்விடமின்றி வழி மாறிய மிருகங்கள்

சுழற்சி முறையற்ற தட்ப வெப்ப மாற்றங்கள்

சுவாசித்தால் திணற வைக்கும் காற்று 

வாசம் இழந்த மலரின் மணம் .....

நான் படைத்த உலகம் இதுவல்லவே ....!!!


வரமாய் பெற்றதை வைத்து வளமாய் 

வாழும் வழியை மறந்தான் மனிதன் .....


இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதன் எங்கே???

தானியங்கியாகி தன்னலமாய் மானுடம் மறந்தானோ!!!!


குடிப்பதற்கே நிலத்தில் நீரில்லை எனும்போது 

குளிர்பானங்கள் எங்கிருந்து வந்தனவோ ??


நடைபிணமாய் வாழ்ந்திடும் உனக்கு

நெடுஞ்சாலைகள் எங்கு செல்வதற்கு ???


உணவை விளைவிக்க நிலமில்லை எனும்போது 

உறைவிடமாக பெருங்கட்டிடங்கள் எவ்வாறு 

வளர்ந்தனவோ ??


விளையும் பூமியை வீழ செய்து ....

வேலைவாய்ப்பு ஏற்படுத்தி வாழ வா என்கிறான்..... 


கானகம் அழித்து இடம்பெயர்ந்து 

வீட்டுக்கொரு மரம் வளர்க்க வேண்டும் என்கிறான் ....


குடிசை வீட்டில் குளிர்க்கிறதென்று 

கூரைக்கு கொள்ளி வைப்பாருண்டோ ???


நுனிக்கிளையில் அமர்ந்தே மரத்தை வெட்டும் 

மனிதா .....உன்னிடம் 

தன்னை புதைத்திட குழி தோண்டும் வித்தை 

கற்றுக்கொள்ளலாம் போல !!


பூவுலகாய் மாற்றாவிட்டாலும் 

புதை குழியாய் மாற்றிடாதே 

இனியேனும் பூமியை.... என்றே

இயற்கை அன்னை மறைந்தாராம்.....


Wednesday, 13 May 2020

மழை

ஊன் உயிர் அதன்  ஓசை
மண் சேரும் உன் இசை
மேளதாளம் முழங்கும் ஒலியில்
வெள்ளிக்கீற்றின் ஒற்றை ஒளியில்
வான்  தரும்  மழையின்  விளைவோ
வாசம் புதிதாய் மண்ணில் எழுகிறது !!
கருமேகமாய் வானில் நீ..... கார்முகிலே
புதுதேகமாய் பூவில் நீ.....தேன்துளியே 
நீர்த்துளியாய்  காற்றில் நீ ....தென்றலே
புல்வெளியாய் சேற்றில் நீ..... செம்புலமே
மேகத்திரை  விலகும்  வரை
ஏங்கும்  நீரும்  நித்தம்  தீரும்
கடல் கைதி வானில்  சிறை
விடுதலை பெற்று மண்ணில் விழ
பூமி எங்கும் தூறல் உலா
இதழ்  ஓரங்களில் துளியாய்  நீ  பேசு
அலர்  விரிகையில்  வாசமாய்  நீ  வீசு  
கருமையில்  சிறு  தென்றல் துளி விதைத்து
மடைத்திறக்கையில்  வெள்ளமாய்   நீ 
கதைத்திடு  மழையே ...!!

Friday, 24 April 2020

ஆறாம் விரல்


என் தொலைத்தொடர்பு நட்பே ....!!
காலை எழுந்ததும்...
கண்கள் பார்க்கும் கண்ணாடி நீ 
சாலை பயணத்தில்....
பாதை காட்டிடும் வழிகாட்டி நீ 
என்னோடு நீ சேர்ந்த நாள் முதலாய் 
உன்னோடு உரையாடி என் நேரங்கள் முடிகிறது 
கண்ணோடு கதை பேசி காலங்கள் தேய்கிறது 
கையோடு ஒட்டிக்கொண்டு விலகாமல் வாழ்கிறாய் 
வானோடும் மண்ணோடும் நிகழும் யாவுமே 
தினந்தோறும் நீ கொண்டு வருகிறாய் 
கானங்கள் கதைகள் காவியம் பாடியே 
மனமெங்கும் நீ லயித்து நிற்கிறாய் ....

மென்மேலும் மெருகேறி 
மென்பொருளில் உருமாறி 
தேசம் எங்கும் நீ நிறைந்திருக்க 
நேசம் எங்கோ சென்று மறைந்திருக்க 
நேரம் தொலைந்து காலம் கரைந்து 
தேகம் ஒன்றாகி போனது உன்னோடு இன்று .....
உன்னுள் மின்சாரம் பாய்கையில் 
என் உயிரும் இங்கு மீளுது ...

நீ என் தோழனா இல்லை  பகைவனா 
என்  தூரத்து சொந்தமா நீ 
ஆயினும் துரத்துது உன் பந்தமே !!
உன்னை மறுத்திடவே முனைந்தேன் 
உன்னை துறந்திடவே  துணிந்தேன் ..
உன்னை தள்ளிவைக்கவே எத்தனிக்கிறேன் 
அந்த முடிவையுமே ஏனோ ஒத்திவைக்கிறேன்..

என்னின் ஆறாம் விரலே ..!!
தூரத்து சொந்தங்கள் எல்லாம் அண்மையாய் 
பக்கத்து பந்தங்களை தொலைவாய் செய்வித்து 
நமக்கென்றோர் உலகம் செய்து என்னை 
வாவென்று அழைத்து கைது செய்கிறாய் 
வீட்டோடு நான் வாழ்ந்துமே என்னை 
தீவுக்குள் சிறை வைத்தாய் உன்னோடு.....!!!

Sunday, 29 March 2020

மீள்கிறது உலகம்


நுண்கிருமி ஒன்றை உயிரை கடத்தி செல்ல
உலகை திருத்தி செல்ல படைத்து சென்றான் ...
வான்வெளியில் அது விண் கடந்து மண் அளந்து
பூமி எங்கும் சிதறி கிடக்கின்றது ....
உயிரை மீட்டெடுக்க உலகை மீட்டெடுக்க
பெரும்போர் நடக்கின்றது ....உலகம் தவிக்கின்றது

சாதி மத பேதம் களைந்து
உயர்ந்தவன் தாழ்ந்தவன் எல்லாம் துறந்து
உதவிக்கரம் கேட்டு  காத்திருக்கிறான் ....
யார் எவர் எல்லாம் மறந்து
விழி திறந்து வாழ்வை காக்க
உறக்கம் தொலைத்து உறவை தவிர்த்து
விடியல் நோக்கி சேவை செய்யும் மக்கள் ..
மனிதன் வீழுகிறான் ..... மனிதம் விழிக்கிறது

அலுவலக கட்டிடங்கள் அங்கு அனாதையாய்
இயங்கிய இயந்திரங்கள் உயிர்ப்பின்றி உறங்க
தயங்கியே உரசியது சாலையை வாகனங்களும்
வியந்தே பார்த்தது மிதிப்படாத வீதிகளும் ....
மூவேழு நாட்களில் முறையே தீருமென்றெண்ணி
பூட்டில்லா சிறையிலே உயிர் காத்திட
வீட்டிலே உறவுகளோடு காவல் வைத்தான் ...

அலைந்து திரிந்தே ஓய்வின்றி உழைத்தவன்
அடைந்து கிடக்கின்றான் நான்குசுவர் மத்தியில்
கால்கள் வெளியே செல்ல எத்தனிக்கும்
கண்கள் வெளியுலகம் காண காத்திருக்கும்
செவி கேளா ஓசை கேட்க வலித்திருக்கும்
நாசிகள் சுவாசம் இல்லாதுபோல் தனித்திருக்கும்
கைகள் கட்டுண்டதாய் உணர்வின்றி மாய்த்திருக்கும்
ஆயினும் அடக்கத்தான் வேண்டும் ஐம்புலனையும்
ஆபத்துநேரம்  ஓட்டுக்குள் ஒடுங்கும் ஆமையாய் ....


Saturday, 28 March 2020

இயற்கையின் சீற்றம்


இறைவன் படைத்த உலகம் இன்று
இரையாய் கேட்கிறது மனிதஉயிரை
கறைகள் துடைக்க கலகம் என்று
இரைந்து சொல்கிறது இயற்கை ....

தேவைக்கேற்ப நீ எடுத்து செல் என்று
வாரி வழங்கியது தன்  வளத்தை....
அள்ளி கொடுத்த பின்னும் ஆசை தீரவில்லை
கிள்ளி எடுத்திட சொன்னது மனித மனம் ...
அகல கால் வைத்ததினால் அண்டமே இன்று
அகலாத துயரம் கொண்டது...ஆறாத ரணம்...

மண்ணில் என்னை புதைத்து சென்றாய்
விண்ணில் என்னை வீழ செய்தாய்
காற்றில் என்னை களங்கம் செய்தாய்
நீரில் என்னை மூழ்க செய்தாய்
நெருப்பில் என்னை சிதைத்து விட்டாய்

போதும் என்னை விட்டு விடு
கொஞ்சம் என்னை வாழ விடு
மிஞ்சும் என்னை மீட்டு விடு
உயிலின்றி உறவின்றி கரம் நீட்டி
நீ போன பின்னும் துணை நிற்க
உன் சந்ததிக்கு வினை செய்ய ....!!

Saturday, 27 July 2019

மனிதனும் மாற்றமும்

காலம் உருண்டோட
ஞாலமோ மருண்டோடுது ...
கதிர்வீச்சில் மட்டுமே ஒளிந்திருந்த நேரம்
கண் சிமிட்டுது காலக்கெடுவையாய் ...
சேவலின் கூவலில் விடிந்த காலை
அலைப்பேசியின் எச்சரிக்கை ஒலியாய்..

மலர்ந்த  பூக்களில்  கமழ்ந்த சுகந்தம்
அடைக்கப்பட்ட வாசனைத் திரவியமாய் ...
பனை ஓலை வேய்ந்த இல்லம்
கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடமாய் ...
அணை கட்டி பெருகிய ஆறு
கொள்ளை போகும் மணலாய் ...

முப்போகம் விளைந்த விவசாய பூமி
இப்போது  காய்ந்த  முற்காடாய் ...
அம்மியில் அரைத்த பாட்டி சமையல்
அடுக்களையின் நவீன இயந்திரமாய் ...
பிறந்து வளர்ந்த சொந்த ஊரிற்கு
என்றாவது வரும் விருந்தாளியாய் ....!!!

கடவுள் படைத்ததாய்
பிரகடனப்படுத்தப்பட்ட பிரபஞ்சம்
ஆளப்பட்டது  மனிதனால் ....!
மனிதன் உருவாக்கிய
வர்த்தகம் இணையம்
ஆள்கிறது உலகை ....!!


 

வானவில்

Related image


நீலக் கம்பளமாம் வானம்
நிகழ்ந்தது தன்னிலோர் அற்புதம்
நொடிப் பொழுதேனும் நிறைந்திடும்
நெஞ்சம் காணும் நேரம்
ஏழுவண்ணப் பட்டு உடுத்தி
எழிலாய் உலா வந்தாள்
எட்டா உயரத்தே எவர்
வரைந்த ஓவியமோ ??
எட்டிப் பிடிக்கும் முன்னே
மறைந்திடும் காவியமோ ??

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...