Monday, 25 March 2019

தொடக்கம்

     


          எத்தனையோ  ஏமாற்றங்களுக்கும்  ஏக்கங்களுக்கும் மத்தியில் ஒரு சில எதிர்பார்ப்புகள் நிறைவேறிட கூடும் என்ற நம்பிக்கையில் இந்த வாழ்க்கை பயணம் காலம் கடந்து இன்னமும் தேடலிலே தொடர்கிறது . அது போன்றே ஒரு சிறிய எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் கொஞ்ச காலம் உறங்கி கொண்டிருந்த என் எழுதுகோலை எழுப்பி என்னோடு பயணிக்க செய்கிறேன். இதுகாறும் எனது எழுத்துக்களுக்கு தன்னம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்த எனது நட்பு வட்டாரங்களுக்கு நன்றிகளுடன் இப்பொழுது சிறிய முயற்சியாய் கவிதை நடையில் இல்லாது உரைநடையில் எனது எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க விழைகிறேன். முதல் பதிவு ... முதல் தொடக்கமாய் ..!!
        புலரும்  காலை.. உதிக்கும் செங்கதிரோன் ..அலரும் மலர் ... வீசும் தென்றல் ... இப்படி ஒவ்வொன்றிற்கும் ஒரு தொடக்கம் உண்டு . புது வருடம் ... பிரதி மாதம் .... தினந்தோறும் ...மணித்துளி ... நொடிப்பொழுது ... இப்படி எதிலிருந்து வேண்டுமானாலும் தொடங்கப்படலாம் . மகிழ்ச்சி.. வருத்தம் ..கோபம்.. துக்கம்.. வெற்றி.. தோல்வி...ஆக எல்லா உணர்வுகளுக்கும் ஒரு தொடக்கம் உண்டு .நாம் எவ்வாறு தொடங்குகிறோம் என்பது மட்டுமே வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்கிறது.
             வாழ்க்கை ஒரு குழந்தை போல. ஆம் , ஒரு குழந்தை கருவில் உருவாக தொடங்கியதிலிருந்து ஒரு புதிய ஆரம்பம் உண்டாகிறது. பிறந்த பின்பு , சிரிக்கும் பொழுது , அழும்பொழுது , தவழும்போது , விழும்பொழுது , எழும்பொழுது , வளரும்பொழுது என ஒவ்வொரு நிலையிலும் மகிழ்கிறோம் . அந்த குழந்தையின் எதிர்காலம் இன்றைய நம் வளர்ப்பில் தானே உள்ளது . ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்கிறோம் . எதிர்கால கனவிற்காக இன்றைய  ஒவ்வொரு   நிமிடங்களையும்  சிறு தொடக்கமாய் கொள்வோம் . 
        வாழ்க்கை ஒரு வற்றா பெருங்கடல்..ஆபத்தானது ;ஆனால்  அழகானதும் கூட. அதில்  நாம்  செய்யும் ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. சிலநேரம் அமைதியாய்..ஆத்மார்த்தமாக ; சில நேரம் ஆக்ரோஷமாய்.. வலி உள்ளதாக. இப்படிப்பட்ட வாழ்க்கையில் தொடக்கங்கள் மட்டுமே உண்டு, முடிவு என்பது இல்லை.ஆம், இறப்பு என்பது முடிவல்ல ; நாம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ்ந்திருந்தால் !!  புத்தராய் ஏசுவாய் வாழ வேண்டுமென்பதில்லை , மனிதராய் வாழ்ந்தால் கூட போதும் . இறப்பிற்கு பின்னும் பேசப்படுவோம். நீங்கள் நம்புகிறீர்களோ..  இல்லையோ .. ஒவ்வொரு முடிவிலும் ஒரு தொடக்கம் இருக்கிறது. பழுத்த இலைகள் உதிர்ந்து தளிர்களை தருகிறது. காய் முதிர்ந்து பழமாய் மாறுகிறது . அரும்பிலிருந்து முகையாகி , மொக்காகி  முகிழ்ந்து மலர்ந்து அலர்ந்து உதிர்ந்து செம்மலராகி ... இப்படி ஒவ்வொரு நிலையின் முடிவிலும் புதிதாய் தொடக்கம் உள்ளது. இது முடிவா இல்லை தொடக்கமா .... நீங்களே முடிவு செய்யுங்களேன்  !! 
     கரைந்து போன நிமிடங்கள் முடிவென  எண்ணம் கொள்ளுகிறீர்களா ??  நிச்சயமாய் இல்லை , அது நினைவுகளின் தொடக்கம் !! இறந்தகாலத்திற்கு என்றும் அழிவில்லை .. அது நினைவுகளாய் நிலைக்கும் ..!! தொடங்குவோம் நினைவுகளை சேகரிக்க ....!!
           நீர்த்துளிகள் காற்றில் கரைந்து முகிலில் தொலைந்து மழையாகி பூமி சேர்ந்து  மீண்டும் துளியாய் .... இது வெற்றியா தோல்வியா ?? இழப்பு என்பது முடிவா ?? அறவே இல்லை.. இழப்பில் வெற்றிக்கான பாடம் பயின்றுள்ளோம். வலிகளை வென்று புது வழிகளை அறிந்து பிறர் விழி நம்மை கண்டு உயர்த்திட முயல்வோம் .....தொடங்குவோம் வெற்றிக்கான முயற்சியை ....!!
        வாழ்க்கையின் ஓர் உன்னத கலை - அன்பு  செலுத்துவது.உங்களால் முடிந்த வரையில் எவரேனும் ஒருவர் முகத்திலாவது புன்னகையை வரவழையுங்கள். பிறர்க்கு உதவும்பொழுது மனதில் ஒரு சிறு நிம்மதி உதயமாகும் . இதழில் தோன்றும் புன்னகை , இதயத்திலிருந்து எழும் ஒரு சொல்  கூட போதும் பிறர்க்கு உதவ... நம்பிக்கை தரும் ஒரு சொல் போதும் நாணயம் இல்லாதவன் கூட நாயகன் ஆகிடுவான் . தொடங்குவோம் கரம் கொடுத்திட பிறர் சிரம் உயர்த்தி  வாழ்ந்திட ...!! 
     புதியதொரு அத்தியாயமென ...வண்ண எழுதுகோலால் ; பசுமையான நினைவுகளுக்கு பச்சை நிறம் ; மகிழ்ச்சிக்கு மஞ்சள் நிறம் ; வெற்றிக்கு சிவப்பு நிறம் ; தூய்மைக்கு வெள்ளை நிறமென பிடித்த வர்ணங்களில் நிகழ்வுகளை சிறை செய்யுங்கள். எண்ணங்களால் எழுத்துக்களால் வண்ணங்களால்  வடிவமையுங்கள் . வெயிலும் மழையும் இணைந்து வானவில் உருவாவது போல , பகலும் இரவும் கலந்து நாட்கள் உலவுவது போல எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வோம் . நிகழ்வதில் வேண்டியவைகளை சேகரித்து கொண்டு களைகளை விட்டுவிடுவோம். ஒவ்வொரு நொடியும் புதியதொரு முயற்சிக்கான சந்தர்ப்பம் , அடுத்து நிகழ்வதை நாம் தீர்மானிப்போம் . உயிரோடு இருப்பது  மட்டுமல்ல   வாழ்க்கை ...உணர்வுகளோடும் இருந்திட வேண்டும் ! எழுதிட தொடங்குவோம் நம் வாழ்க்கை புத்தகத்தை....!!
         
 இதுவரையிலும் நிகழ்ந்ததை மாற்ற இயலாது . ஆனால்  நிச்சயமாய் இதற்கு மேல் புதிதாய் ஒரு மாற்றத்தை  நிகழ்த்த இயலும் .
    
      எதிர்பார்ப்பின்றி வாழ்ந்திடுங்கள் 
        எல்லையின்றி நேசியுங்கள் 
                                                                                 - முற்றுப்  பெறா முடிவிலி ....

1 comment:

  1. தோல்வியில் இருந்து தான் வெற்றியை பெற முடியும் தோல்வியும் இழப்பும் வெற்றிக்கான படிகள் சிறப்பான வரிகள் தோழி...😍😍😍
    நீர்த்துளிகள் காற்றில் கரைந்து முகிலில் தொலைந்து மழையாகி பூமி சேர்ந்து மீண்டும் துளியாய் .... இது வெற்றியா தோல்வியா ?? இழப்பு என்பது முடிவா ?? அறவே இல்லை.. இழப்பில் வெற்றிக்கான பாடம் பயின்றுள்ளோம். வலிகளை வென்று புது வழிகளை அறிந்து பிறர் விழி நம்மை கண்டு உயர்த்திட முயல்வோம் .....தொடங்குவோம் வெற்றிக்கான முயற்சியை ....!!
    இதுவரையிலும் நிகழ்ந்ததை மாற்ற இயலாது . ஆனால் நித்சயமாய் இதற்கு மேல் புதிதாய் ஒரு மாற்றம் நிகழ்த்த இயலும் .

    ReplyDelete

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...